பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கபடதாரி. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. தமிழக அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததால், கபடதாரி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சூர்யா இந்த போஸ்டரை வெளியிட்டார். இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்தனர் சிபிராஜ் ரசிகர்கள். சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளம் முழுவதும் காமன் DP வெளியிட்டும் அசத்தினர் இணையவாசிகள். இதனையடுத்து இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கபடதாரி படத்திற்கு ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்ஜெயன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். கு.கார்த்திக் மற்றும் அருண் பாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளனர். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. சத்யா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியிருந்தனர். அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து முடிந்தது. நாசர், ஜெயபிரகாஷ் போன்ற நடிகர்கள் டப்பிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற செய்தி வெளியானது. இதனால் விரைவில் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசமதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரவீன் KL எடிட்டிங் செய்கிறார். நவம்பர் மாதம் இந்த படம் வெளியாகவிருக்கும் இந்த படத்தை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். ஓடிடி தளத்தில் வெளியாகிறதா அல்லது திரையரங்குகளில் வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

இந்த படத்தில் சிபிராஜ் ட்ராஃபிக் போலீஸாக நடித்துள்ளார். கடைசியாக நடித்த வால்டர் படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீதம் இருந்த டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் சிபிராஜ். படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.