கோலிவுட் திரை வட்டாரத்தில் புது விதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிய இடைவெளி ஏற்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் இவருக்கு மிகச் சிறந்த கம்பேக் என்றே கூறலாம். அதைத்தொடர்ந்து ஜாக்சன் துரை, வால்டர் என தொடர்ந்து நடித்து வருகிறார். 

ஜாக்சன் துரை பட இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ரேஞ்சர். இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன் மற்றும் மதுஷாலினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அடர்ந்த காட்டில் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார் சிபி சத்யராஜ். புலியை கூண்டில் பிடித்து வைத்துள்ளது போல் போஸ்டர் அமைந்துள்ளது. 

ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, சிவா நந்தீஸ்வரன் எடிட் செய்கிறார். கபிலன் கலை இயக்கம் செய்கிறார். பாஸ்கர் சக்தி வசனம் எழுதியுள்ளார். சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தில் நிறைய இடம்பெறுவதால், ஹாலிவுட்டைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணிபுரியவுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துக்கொன்று தின்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. 

இந்நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் சிபி சத்யராஜ். கோலிவுட் ஹீரோஸ் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளில் வேகம் காட்டி வருவது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிலம்பரசன் ஈஸ்வரன் படத்தின் பணிகளை வேகமாக முடித்து மாநாடு படத்திற்கு சென்றுள்ளார். தற்போது இதே வேகத்தில் கபடதாரி பட பணிகளை முடித்து ரேஞ்சர் படத்திற்கு சென்ற சிபி சத்யராஜை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். 

சிபி கைவசம் கபடதாரி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் டீஸர் வெளியானது.