விஜய் டிவியில் வெளியான குக்கு வித் கோமாளி ஒட்டுமொத்த தொலைக்காட்சி ரசிகர்களையும் ஒரே நிகழ்ச்சியை பார்க்க வைத்தது. வாராவாரம் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலையில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி ரசிகர்களை ரசித்து  சிரித்து கொண்டாட வைத்தது. இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒருவர் சிவாங்கி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளராக நுழைந்த  சிவாங்கி தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அனைவரையும் ரசிக்க வைத்தார்.சிவாங்கியின் குழந்தைத்தனமான சேட்டைகளும் கொஞ்சும் குரலும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

சிவாங்கி கலந்துகொண்ட  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது சிவாங்கியோடு சேர்ந்து போட்டி போட்டவர் சாம் விஷால். சிவாங்கி-சாம் விஷால் இடையேயான அழகான நட்பு சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாயிலாக பலர் கண்டு ரசித்தது உண்டு.  இப்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தின்  பாடலுக்கு பின்னணி குரல்  கொடுத்திருக்கும் தகவல்  சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படமான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் அடுத்து வெளியாக உள்ள  "டாக்கு லெலஸ்ஸு வொர்க்கு மோரு" என்ற சிங்கிள் ட்ராக் பாடலில்  சிவாங்கியும் சாம் விஷாலும் இணைந்து பாடியுள்ளனர். இந்த அறிவிப்பை முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் கதாநாயகன் சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சின்னத்திரையில் கண்டு ரசித்த  சிவாங்கி- சாம் விஷாலின் பின்னணி குரலை தற்போது வெள்ளித்திரையில் காண அவர்களது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இவர் இசையமைத்த ஏதோ சொல்ல என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியான நிலையில் இரண்டாவது பாடலாக  "டாக்கு லெலஸ்ஸு வொர்க்கு மோரு" பாடல் வெளியாக உள்ளது முன்னதாக இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைப்பில் வெளிவந்த அஸ்க்கு மாரோ என்ற ஆல்பம் பாடலை சிவாங்கி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.