தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சாந்தனு, இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடித்த இராவணக் கோட்டம் திரைப்படம் கடந்த மே 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் பீரியட் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகி இருக்கும் புதிய படத்தில் அசோக் செல்வன், பிரித்வி ராஜன், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருக்கிறார். 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கும் நிலையில், விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சாந்தனுவின் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வு நமது கலாட்டா தமிழ் சேனல் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சாந்தனு நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் விழாவில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சாந்தனுவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான பிரித்வி ராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகர் சாந்தனு, “இது ஒரு இனிமையான சர்ப்ரைஸ்.. ஏனென்றால் யார் என்று நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக இவர்தான் என எதிர்பார்க்கவில்லை.. நண்பர் என்பதைத் தாண்டி இப்போது நானும் இவரும் சேர்ந்து ஒரு படம் பணியாற்றி வருகிறோம்." என சொன்னதும், பேச ஆரம்பித்த பிரித்வி, “ஆமாம் நான், அசோக் செல்வன், சாந்தனு மூன்று பேரும் இணைந்து நடித்திருக்கிறோம்” என சொல்ல, இடையில் குறிக்கிட்ட சாந்தனு, “அப்புறம் கீர்த்தி பாண்டியனும் சேர்ந்து நடித்திருக்கிறார். நாங்கள் எல்லாம் சேர்ந்து லெமன் லீஃப் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு படம் செய்திருக்கிறோம். ஒரு பீரியட் கிரிக்கெட் திரைப்படம்.” என்றார்.
தொடர்ந்து அவரிடம், “இதற்காக தானே நீங்கள் கிளீன் ஷேவ் செய்திருந்தீர்கள்?” என கேட்டபோது, “ஆமாம் ஆமாம் அதற்காகத்தான்” என சாந்தனு சொல்ல, இடையில் குறிக்கிட்ட பிரித்வி, “நான் ஒரு 10 கிலோ இவர் ஒரு 12 கிலோ உடல் எடை குறைத்தோம்.” என்றார். தொடர்ந்து பேசிய சாந்தனு, “ஆமாம் ஒரு மூன்று மாதங்கள் இருவரும் ரன்னிங் பார்ட்னராக பயிற்சி செய்தோம் நான் எந்திர்க்கவில்லை என்றால் இவர் எனக்கு போன் செய்வார். இவர் எந்திரிக்கவில்லை என்றால் நான் அவருக்கு போன் செய்வேன். 5மணிக்கு எழுந்து ஐந்தரை மணிக்கு ஆரம்பித்து விடுவோம். வள்ளுவர் கோட்டத்தில் ஆரம்பித்து லீ மெரிடியன் வரைக்கும் ஓடுவோம். ஒரு பத்து கிலோமீட்டர் தினமும் ஓடுவோம். அப்படிதான் 10 கிலோ குறைக்க முடிந்தது. அது எதற்காக என்றால் இந்த படத்தில் நாங்கள் எல்லோருமே அந்த ஒரு 22 - 23 வயது பசங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக எடையை குறைத்து பிறகு ஷேவெல்லாம் செய்தோம்.” என்றபோது பேசிய பிரித்வி, “கண்டிப்பாக அது பார்க்கும்போது ஒரு நம்பகத்தன்மை இருக்கும். எல்லோருக்குமே நம்பிக்கையாக இருக்கும்” என சொல்ல தொடர்ந்து பேசிய சாந்தனு, “எங்கள் இருவருக்கும் என்ன ரொம்ப பிடிக்கும் என்றால் கிரிக்கெட்!, அதே மாதிரி ஒரு கிரிக்கெட் படத்திலேயே நடித்து இருக்கிறோம். இவர், நான், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் எல்லோரும் நண்பர்கள் அதனால் இது ஒரு மகிழ்ச்சியான ஷூட்டிங்காக இருந்தது.” என தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.