1990களில் பிறந்தவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் “சக்திமான்” என்ற கதாபாத்திரத்தை மறந்துவிட முடியாது. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான் தான். அதுவும் திரைப்படம் அல்ல தொலைக்காட்சி தொடர். சக்திமான் 1997 ஆரம்பத்திலிருந்து 2005-ஆம் ஆண்டுவரை தொடர்ந்து ஒளிபரப்பாகியது. 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரட் தொலைக்காட்சித் தொடராக சக்திமான் இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. 

பிரபல பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா சக்திமான் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். முதலில் மகாபாரத தொடரில் பீஷ்மரால் தனது பயணத்தை தொடங்கிய முகேஷ் தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.அதில் சக்திமான் தொடர் மட்டுமே அவரை இந்தியா முழுக்க அறியச் செய்தது. தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்த நடிகர் முகேஷ் கண்ணா தொடர்ந்து பல ப்படங்களில் நடித்து வந்துள்ளார். 

62 வயதான முகேஷ் கண்ணா திரை துறையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவ ஆரம்பித்தது. 

இதனால் முகேஷ் கண்ணாவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள பலரும் முகேஷ் கண்ணாவை தொடர்பு கொண்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து முகேஷ் கண்ணா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு  அவர் மீது இருக்கும் அத்தனை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தன் மீது அக்கறை கொண்டு பலரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இதனை தீர்த்து வைக்கும்படி தெரியப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.