பாலியல் தொல்லையில் இனி ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்து வருவதாகவும், சரியான முடிவு எடுத்தபின் முதலமைச்சரிடம் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

அத்துடன், பாலியல் ரீதியிலான நிகழ்வுகள் நடப்பது வேதனைக்குரியது என்றும், இதுபோன்ற ஆசிரியர்களினால் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நிதி தேவைப்படுவதால், முதலமைச்சரிடம் அரசு பரிசீலனை செய்து சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.