திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை, ஆழமான கருத்துடன் தந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இயக்குனர் செல்வராகவன். இவரது படங்கள் வெறும் படங்களாக இல்லாமல், பாடமாகவும் இருந்து வருகிறது. தனது தரமான ஸ்கிரிப்ட்டுகள் மூலம் தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என்று அழைக்கப்படுகிறார். திரைக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தூரத்தை குறைப்பதில் இவருக்கு நிகர் இவரே. 

இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. கடைசியாக சூர்யா வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கியிருந்தார். 

இதையடுத்து புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் பேசிய செல்வராகவன் இதைத் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். புதுப்பேட்டை படம் வெளியான நேரத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும் அதற்குப் பின் பேசப்பட்டது. இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் திரைத்துறையினர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். சிலர், ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் பதிலளித்தும் வருகின்றனர். இயக்குனர் செல்வராகவனும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவ்வப்போது பதிவிட்டு வரும் அவர் தற்போது ஜாலியான ட்வீட் ஒன்றைப் செய்துள்ளார்.

கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள் ? நான், நண்பர்களுடன் மாலை முழுவதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததைச் சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன் என்று பதிலளித்துள்ளார் செல்வா. 

காதல் கொண்டேன் படத்தில் வினோத் திவ்யா நட்பு, 7ஜி-ல் கதிர் மற்றும் அவரது நண்பர்கள், மயக்கம் என்ன படத்தில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் என காட்சிகளிலே நண்பர்கள் வைத்து நட்பின் ஆழத்தை எடுத்துரைத்திருப்பார் செல்வா.