தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் நடிகராக புது அவதாரம் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். முன்னதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் திரைப்படத்தின் மூலம் முதல்முறை நடிகராக களம் இறங்குகிறார் செல்வராகவன்.

சீன் ஸ்கிரீன் மீடியா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகும் சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் யாமினி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சாணிக் காயிதம் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக இடையில் தடைபட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இன்று படப்பிடிப்பை நிறைவு செய்த பின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் விதமாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக வெளியான சாணிக் காயிதம் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர் ,டிரைலர் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்ததாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.