இந்திய திரையுலகின் ஈடுஇணையற்ற நடிகர்கள் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ். முன்னதாக பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்துள்ள அற்றங்கி ரே படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என  வருகிற டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது.

தொடர்ந்து ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தி கிரே மேன், மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் முன்னதாக சாணி காயிதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்குகிறார். தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்திலும் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார்.

அடுத்ததாக மீண்டும் தனுஷ்-செல்வராகவன் இணைந்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கலைப்புலி.எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் நானே வருவேன் படத்திற்கு யாமினி யக்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இயக்குனர் செல்வராகவன் தனது கைகளால் கேமராவை தாங்கி இயக்கி சில காட்சிகளை படமாக்கியுள்ளார். இதுகுறித்து, “18 வருடங்களுக்கு(புதுப்பேட்டை) பிறகு எனது கைகளால் கேமராவை தாங்கி ஒளிப்பதிவு செய்துள்ளேன்... நானே வருவேன் திரைப்படம் முழுக்க முழுக்க கேமராவை கைகளால் தாங்கியபடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட படமாக இருக்கும்" என தெரிவித்து, தான் கேமராவை இயக்கும் புகைப்படத்தையும் சிறிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். அந்த பதிவு இதோ…