தமிழ் சினிமாவில் தனக்கே உரித்தான பாணியில் சிறந்த திரைப்படங்களை கொடுத்து தன்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன்.  தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் மற்றும் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் செல்வராகவனின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த முக்கியமான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். கிரீன் வேலி கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கியிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது. பின்னணி இசையிலும் பாடல்களிலும் ஜிவி பிரகாஷ் குமாரின் உழைப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நடிகர் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக வெளியானது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த உண்மையை இயக்குனர் செல்வராகவன் இன்று பகிர்ந்து கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ,
 
“ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான்!! ஆனால், திரைப்படம் மெகா பட்ஜெட் படம் என எதிர்பார்ப்புகளை அதிகரிக்க படத்தின் பட்ஜெட்டை 32 கோடி என தெரிவித்தோம். படத்தின் உண்மையான பட்ஜெட்டை விட திரைப்படம் நல்ல வசூலைப் பெற்ற போதும் சராசரி திரைப்படமாகவே அங்கீகரிக்கப்பட்டது. இதிலிருந்து என்ன ஆனாலும் பொய் சொல்ல போவதில்லை என்பதை கற்றுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் இரண்டாம் பாகம் தயாராக உள்ள நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் குறித்த உண்மையை செல்வராகவன் பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.