தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர். தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படைப்புகளை அளித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். 

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.

சமீபத்தில் மாமனிதன் வெளியீடு தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது குருநாதருடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் இந்த புகைப்படம் இணையத்தை ஈர்த்து வருகிறது. கமெண்டில் படம் குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். 

தற்போது உள்ள தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. விஜய்சேதுபதியின் திரைப்பயணம் மிகவும் அழகானது. ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக, குறும்படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியின் திரைத்தாகத்திற்கு, தென்மேற்கு பருவக்காற்று எனும் படம் மூலம் விதை போட்டவர் இயக்குனர் சீனுராமசாமி அவர்கள். 

இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார். சில நாட்கள் முன்பு விஜய்சேதுபதி நடத்திய Human போட்டோஷூட் இணையத்தை அசத்தியது. விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தை காண ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படமும் விஜய்சேதுபதி கைவசம் உள்ளது. 

இதுதவிர்த்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய லாபம் மற்றும் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் உருவான யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதியின் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. லாக்டவுனுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.