எதார்த்தமான படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்த இவர் தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படங்களை அளித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். 

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.

சமீபத்தில் மாமனிதன் வெளியீடு தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியிருந்தார். மேலும் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சீனு ராமசாமி. 

இந்நிலையில் நடிகர் குருசோமசுந்தரத்தின் நடிப்பு குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அவரது பதிவில் வஞ்சகர் உலகம் படத்தில் நான் பார்த்த நல்லமனம், சோமு என நான் அழைக்கும் குருசோமசுந்தரம்
என் மனதில் விழுந்த நிழல் நிஜமானது. மாமனிதன் படத்தில் இஸ்லாமிய டீக்கடை வாப்பா என்றதும் அவர் நடையில் காட்டிய மாற்றத்தை ரசித்தேன். பாத்திரம் தான் என்னுடையது அதில் ஊறிய ஊற்று நீர் இந்த நடிகருக்கானது என புகழாரம் சூட்டியுள்ளார். 

இயக்குனர் சீனு ராமசாமி கூறியது போல, திரை விரும்பிகளின் ஃபேவரைட்டாக திகழும் நடிகர்களில் ஒருவர் குரு சோமசுந்தரம். பாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் அற்புதாமான கலைஞன். 2011-ம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் என்ற படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிறு சிறு ரோல்களில் நடித்து வந்தார். ஜிகர்தண்டா படத்தில் இவர் பாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. அதன் பின் 2016-ம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் இவருக்கு மாபெரும் அந்தஸ்த்தை பெற்று தந்தது. பாம்பு சட்டை, வஞ்சகர் உலகம், பேட்ட போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் மின்னல் முரளி படத்திலும, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம். 

மாமனிதன் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இவரது நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். விஜய்சேதுபதி தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெய்ப்பூரில் டாப்ஸி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தவர், லாபம் படக்குழுவில் இணைந்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் zeeplex தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.