லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. இதனிடையே அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும் படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்த படக்குழு தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்ள தமிழக அரசிடம் அனுமதி கோரியது. அதேவேளையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால் தமிழக அரசு தன்னுடைய அறிவிப்பை வாபஸ் பெற்று 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற பழைய நிலையே தொடரும் என்று அறிவித்தது.

கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களைக் கடந்து திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்த தருணத்தில் மாஸ்டர் படம் வெளியாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனால், படக்குழு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தளபதி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளாயினர். 

இதனையடுத்து படத்தின் காப்பியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை தொடங்கினர். அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக SDC டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனம் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது.

திரைப்பட காட்சிகள் இணையத்தில் கசிந்ததை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators.மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து! என்று ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஒரு திரைப்படம் வெளியாவதென்பது ஓர் தாய் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என்பார்கள். சினிமா என்பது என்டர்டெயின்மென்ட் நிறைந்த ஒரு துறை என்றாலும், இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பம் உள்ளது என்பதை அக்கறையுடன் நினைவு கூர்கிறது நம் கலாட்டா. இந்த பொங்கல் மாஸ்டர் பொங்கலாய் அமையட்டும். வாத்தி ரைடு நாளை முதல்....