உலக அளவில் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் திரைப்படம் ஓ மை கோஸ்ட். கலகலப்பான காமெடி ஃபேன்டஸி அட்வென்ச்சர் த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் R.யுவன் எழுதி இயக்கியுள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து சதீஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி மற்றும் வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் K.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில் அருள்.E.சித்தார்த் படத்தொகுப்பு செய்ய ஜாவத் ரியாஸ் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தரண் குமார் பின்னணி இசை சேர்த்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என PAN INDIA திரைப்படமாக ஓ மை கோஸ்ட் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சதீஷ், “சன்னி லியோன் பாம்பேவில் இருந்து வருகிறார் புடவை கட்டியிருக்கிறார் கோயம்புத்தூரில் இருந்து வரும் தர்ஷா குப்தாவின் ஆடையை பாருங்கள்” என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில், பெண்களின் ஆடை பற்றி இவ்வாறு பேசியது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் சதீஷ் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "இந்த ஆடை விஷயம் குறித்து ஏற்கனவே நானும் தர்ஷாவும் நிகழ்ச்சிக்கு முன்பே பேசி வைத்திருந்தோம். அவர் கேட்டுக்கொண்டதைத்தான் நான் மேடையில் பேசினேன். மற்றபடி வேறு எந்த எண்ணத்திலும் நான் இப்படி பேசவில்லை" என விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்த விளக்கமான வீடியோவை கீழே உள்ள லிங்க் காணலாம்.