கோலிவுட்டில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஈசன் எனும் படத்தை இயக்கினார். இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், போராளி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய அனைத்து படங்களும் ஹிட். கடந்த ஆண்டு பேட்ட, கென்னடி கிளப், அடுத்த சாட்டை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார். 

சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பகைவனுக்கு அருள்வாய். அனிஸ் இயக்கத்தில் இப்படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு வெளியான திருமணம் என்னும் நிக்காஹ் திரைப்படத்தை இயக்கியவர் அனிஸ். சசிகுமார் நாயகனாக நடிக்க வாணி போஜன், பிந்து மாதவி, நாசர், சதீஷ்,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

முன்னதாக இதன் படப்பிடிப்பு தொடக்கம் மற்றும் தலைப்பு அறிவிக்கப்பட்டு, பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மற்றொரு சுவாரஸ்யத்தை அளித்திருக்கிறது. சூர்யா, பிரித்வி ராஜ், ராம் கோபால் வர்மா போன்ற பிரபலங்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கருப்பு சட்டை, கருப்புபேண்ட், தாடி, நீண்ட முடி என ரெட்ரோ லுக்கில் செம ஸ்டைலாக உள்ளார் சசிகுமார்.

சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ரெட்ரோ லுக்கில் சசிகுமாரை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்ய ஜிப்ரான் இசையமைக்கிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார்.

சசிகுமார் நடித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ராஜவம்சம் மற்றும் எம்ஜிஆர் மகன். ராஜவம்சம் படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் மகன் படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இரண்டு படங்களுக்கும் சென்சார் பணிகள் முடிந்து,  சரியான ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து முடிச்சு ரீமேக்கிலும் நடிக்கிறார் சசிகுமார்.