விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் டிடிஹெச் மற்றும் ஓடிடி தளம் ஆகியவற்றில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். 

இதனைத் தொடர்ந்து விருமாண்டியின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தற்போது தனது அடுத்த படத்துக்கான கதையை இறுதி செய்து, திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளார் விருமாண்டி. இந்தக் கதையைக் கேட்ட சசிகுமார், உடனடியாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் விருமாண்டி இயக்கவிருக்கும் புதிய படத்தில் சசிகுமார் தான் நாயகனாக நடிக்கவுள்ளார். 

பரதன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர். விஸ்வநாதன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாம் படமாகும். ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவலும் மற்ற நடிகர்களின் விவரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சசிகுமார் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் ராஜவம்சம். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் உள்ளது. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கிறார் சசிகுமார். சமீபத்தில் சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.