தமிழ் சினிமா உலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சுப்ரமணியபுரம், ஈசன், நாடோடிகள், போராளி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் ஆகிய அனைத்து படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட். 

ஜப்பான்-டோக்கியோவில் நடைபெறவுள்ள 2021 ஒலிம்பிக்போட்டிக்கு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி அவர்கள் தேர்வாகியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி தவித்து வந்த பெண்ணுக்காக ரூ. 2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் சசிகுமார். 

இந்த உதவியை மனதில் வைத்துக்கொண்டு தன் தாயுடன் வந்து சசிகுமாரிடம் நன்றி தெரிவித்துள்ள பவானி, இன்று ஒலிம்பிக்கில் வாள் சண்டைக்காக தேர்வாகியுள்ளார். நடிகர் சசிகுமாரின் இந்த உதவி குணத்தை பற்றி கோலிவுட் வட்டாரத்தில் புகழ்ந்து வருகின்றனர்.

சசிகுமார் நடிப்பில் தயாராகி வரும் படம் பகைவனுக்கு அருள்வாய். இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் என்னும் நிக்கா என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சசிகுமாரோடு வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. 

சசிகுமார் கைவசம் ராஜவம்சம் படம் உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படமும் வெளியாகவுள்ளது.