சமீபத்தில் நடிகர் சரத்குமார் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அவரின் மனைவி ராதிகாவும், மகள் வரலட்சுமியும் ட்விட்டரில் தெரிவித்தார்கள். சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றார் ராதிகா. இந்நிலையில் தன் உடல்நலம் குறித்து சரத்குமாரே பதிவு செய்திருக்கிறார். 

அந்த ட்வீட்டுகளில் அவர் கூறியிருப்பதாவது, கடவுளின் அருளாலும், ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவக் குழுவின் ஆதரவு, குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள், திரைத்துரையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், சமகவை சேர்ந்த என் சகோதர, சகோதரிகளின் பிரார்த்தனையாலும் நான் குணமாகி வருகிறேன். விரைவில் நான் பழையபடி வேலையை துவங்கிவிடுவேன்.

தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர், அரசியல் கட்சி தலைவர்கள், மீடியாவின் அன்புக்கும், அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார். சரத்குமாரின் ட்வீட்டுகளை பார்த்த அவரின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமாகி பழையபடி தெம்பாக இருக்க பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

படப்பிடிப்புகள் நடக்கும் இடங்களில் அரசு விதிமுறைகளை பின்பற்றினாலும் நடிகர்கள், நடிகைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமன்னா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தனர்.

சமீபத்தில் சரத்குமாரின் Bird of Prey என்ற ப்ராஜெக்ட்டின் புகைப்படங்கள் வெளியானது. ஓடிடி தளத்திற்காக முதல் முறையாக நடிக்கும் சரத்குமாரை வரவேற்றனர் திரை ரசிகர்கள். இது வெப் சீரிஸா அல்லது படமா என்பது குறித்த தகவலும் கிடைக்கவில்லை. அர்ச்சனா என்பவர் எழுதிய Birds of Prey என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.