இந்தியில் வெளியான லக்ஷ்மி படத்தைத் தொடர்ந்து, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் லாரன்ஸ். அடுத்து இயக்கவுள்ள படத்துக்கான கதை விவாதம் நடைபெற்று வரும் சமயத்தில், நடிக்கவுள்ள படத்தின் பணிகளையும் லாரன்ஸ் கவனித்து வருகிறார். பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். 

இதில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படம் தான் ருத்ரன். இதன் போஸ்டர் ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. ருத்ரன் படத்தின் இயக்குனர் யார் என்பதைப் படக்குழு அறிவிக்கவே இல்லை. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். 

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசனே இந்த படத்தை இயக்கவுள்ளது சமீபத்தில் உறுதியானது. ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல வரவேற்பைப் பெற்ற படங்களை அவர் தயாரித்திருந்தாலும், இதுவரை இயக்குனராகப் பணிபுரிந்ததில்லை. தற்போது ருத்ரன் படத்தைத் தயாரித்து, இயக்கி வருகிறார். 

இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமார் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஷூட்டிங்கிற்கு ஹைதராபாத் சென்ற நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் குணமடைந்தார். 

சரத்குமாரின் Bird of Prey என்ற ப்ராஜெக்ட்டின் புகைப்படங்கள் வெளியானது. ஓடிடி தளத்திற்காக முதல் முறையாக நடிக்கும் சரத்குமாரை வரவேற்றனர் திரை ரசிகர்கள். இது வெப் சீரிஸா அல்லது படமா என்பது குறித்த தகவலும் கிடைக்கவில்லை. அர்ச்சனா என்பவர் எழுதிய Birds of Prey என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.