திரையுலகின் முன்னணி நடிகராகவும், இளைஞர் போல் இளமையாகவும் இருப்பவர் நடிகர் சரத்குமார். நடிகர், வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், தயாரிப்பாளர், நடிகர் சங்கத் தலைவர் எனத் திரையுலகில் அனைத்தையும் கரைத்து குடித்தவர். 

இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் நாட்டாமையாக ஜொலித்தவர். இன்று சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். நள்ளிரவு 12 மணிக்கு மகன் ராகுலுடன் சேர்ந்து கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

இந்நிலையில் அவரது மனைவியான நடிகை ராதிகா சரத்குமார், Bird of Prey - The Hunt Begins என்ற போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், இந்த நல்ல நாளில் உங்களை ஓடிடி உலகத்துக்கு வரவேற்கிறேன், பிறந்த நாள் வாழ்த்துகள் சரத் என்று பதிவு செய்துள்ளார். 

இதன் மூலம் ஓடிடி தளத்தில் சரத்குமார் அறிமுகமாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இது வெப் சீரிஸா அல்லது படமா என்பது குறித்த தகவலும் கிடைக்கவில்லை. அர்ச்சனா என்பவர் எழுதிய Birds of Prey என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த பேர்ட்ஸ் ஆப் பிரே-வின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.  மிரட்டலான தோற்றத்தில் சரத்குமாரின் இந்த லுக்  ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியிருந்த வானம் கொட்டட்டும் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சரத்குமார். ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஷாந்தனு ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இதுதவிர்த்து பிறந்தாள் பராசக்தி, அடங்காதே போன்ற படங்கள் சரத்குமார் கைவசம் உள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் சிறந்த நடிகராக திகழும் இவரின் பிறந்தநாளை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.