நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மும்பையிலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது, மகாராஷ்ட்ர அரசும் மும்பை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் பிரபல இளம் நடிகை சாரா அலிகான், தனது குடும்பத்துடன் நேற்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அவருக்குப் பாதிப்பில்லை என்ற நிலையில், அவரது டிரைவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள சாரா அலிகான், எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்றுப் பாதிப்பில்லை. 

டிரைவருக்கு பாசிட்டிவ் என்று வந்ததால் அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்கிறோம். உதவிக்கும் வழிகாட்டுதலுக்கும் மும்பை மாநகராட்சிக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக, விழிப்போடு இருங்கள் என்று பதிவு செய்துள்ளார். 

சாரா அலிகான் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் ஆவார். இவர் கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா படத்தில் நடித்தார். இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் அட்ரங்கி ரே படத்தில் நடிக்கிறார். தனுஷ் மற்றும் அக்‌ஷய்குமார் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.அர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார். லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியவுடன் இதன் ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலிவுட் வட்டாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் என்றே கூறவேண்டும். பிரபல இந்தி நடிகை ரேகா வீட்டு செக்யூரிட்டிக்கு கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

அதன் பிறகு பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகளுக்கும் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதையடுத்து சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்தனர். அவர்களுக்கு அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள சினிமா பிரபலங்கள் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🙏🏻🙏🏻🙏🏻

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on