அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்து ஹிட்டான இந்தி படம் அந்தாதுன். இதை, ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்றது இந்தப் படம். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் பெற்றுள்ளார். அவரே தயாரிக்கிறார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக, உடல் எடையை அவர் குறைத்துள்ளார், பிரஷாந்த். இந்தப் படத்தில் பியானோ மாஸ்டராக நடிக்கிறார். 

இதன் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பல தெலுங்கு ரீமேக் படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, இதையும் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், படத்தில் இருந்து அவர் விலகினார். இப்போது பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜெ.ஜெ.பிரட்ரிக் இயக்குகிறார்.

இதில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. யோகிபாபு, ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கிறார். படத்தில் தபு நடித்த கேரக்டர் நெகட்டிவ் சாயல் உள்ளது. அந்த கேரக்டரில் நடிக்க வைக்க பலரிடம் பேசி வந்தனர். பின்னர் சிம்ரன் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில், இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை படக்குழுவினர் உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் சிறப்பான தேர்வு என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். சந்தோஷ் நாராயணன் கைவசம் ஜகமே தந்திரம், கர்ணன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் கைவசம் உள்ளது. 

ராதிகா ஆப்தே கேரக்டரில் நடிக்கும் நடிகை கிட்டத்தட்ட முடிவாகிவிட்டாராம். புதுச்சேரி பின்னணியில் இதன் கதை நடக்கிறது என்ற தகவலும் தெரிய வந்தது.  ஜனவரியில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதென திரை வட்டாரங்கள் கூறி வருகிறது. 

அந்தாதுன் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள். மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.