தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக அடுத்தடுத்து வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை அடுத்து மேயாதமான் & ஆடை படங்களின் இயக்குனரும் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களின் திரைக்கதை & வசன கர்த்தாவுமான இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் குலுகுலு.

குலுகுலு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய #SANTA15 திரைப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜனயா இந்த புதிய படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் பதிவு & இசை பணிகள் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.