தமிழ் திரை உலகின் இன்றியமையாத நகைச்சுவை நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித் குமார், சீயான் விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன் TR, விஷால், ஜெயம்ரவி, கார்த்தி, ஆர்யா, ஜீவா என முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நகைச்சுவையில் கலக்கியவர் சந்தானம்.

நகைச்சுவை நடிகராக ஜொலித்து வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பிஸ்கோத்  பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா என கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சபாபதி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டீசர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சயின்ஸ் ஃபிக்ஷன் நகைச்சுவை திரைப்படமாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டிக்கிலோனா திரைப்படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உலகநாயகன் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடலின் ரீமேக்காக வெளிவந்த இப்பாடல் தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.