சின்னத்திரையில் விஜய் டிவியின் லொள்ளு சபா வாயிலாக கவனத்தைப் பெற்ற சந்தானம் வெள்ளித்திரையிலும் களம் இறங்கினார். குறிப்பாக பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, கண்டேன் காதலை, சிறுத்தை, பாஸ் என்கிற பாஸ்கரன்,  கலகலப்பு ஆகிய படங்களின் மூலம்  தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

இதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாகவும் களமிறங்கினார் சந்தானம். தொடர்ந்து தில்லுக்கு துட்டு, A1, பாரிஸ் ஜெயராஜ் என நகைச்சுவையை மையப்படுத்திய கதைக்களங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சந்தானத்தின் நகைச்சுவை சரவெடியாக வெளிவந்தது டிக்கிலோனா திரைப்படம்.

KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் காமெடி திரைப்படமாக கடந்த செப்டம்பர் 10-ம் தேதி வெளிவந்த டிக்கிலோனா திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து அனகா, ஷிரின் கஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், முனீஸ்காந்த், சா ரா ஆகியோருடன் கௌரவ தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள டிக்கிலோனா படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் வித்தியாசமான 4 கதாபாத்திரங்களில் நடித்த மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்து, கவிஞர் வாலி எழுதி சூப்பர் ஹிட்டான “பேர் வச்சாலும்” பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ட்ரெண்டாகும் இப்பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.