தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனரும் சிறந்த நடிகருமான சமுத்திரக்கனி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்த தலைவி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர்  R.M.வீரப்பன் அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

அடுத்தடுத்து சமுத்திரக்கனியின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. முன்னதாக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான RRR, சிவகார்த்திகேயனின் டான்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் ஆகியப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து சமுத்திரகனி இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படமாக வெளிவருகிறது வினோதய சித்தம். தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரிப்பில், முன்னணி ஒளிப்பதிவாளர் N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வினோதய சித்தம் திரைப்படத்தில், சமுத்திரக்கனி உடன் இணைந்து தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை சஞ்சிதா ஷெட்டி மற்றும் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், முனிஸ்காந்த் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

மனித உணர்வுகளையும் மனதையும் தொட்டுப் பேசும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ள வினோதய சித்தம் திரைப்படம் நேரடியாக ZEE5 ஒரிஜினல் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக வெளிவருகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர் & பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.