திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா. 

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் உடற்பயிற்சி, யோகா, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டினார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா. 

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை அமேசான் ப்ரைம் தயாரித்துள்ளது. இந்த சீஸனில் சமந்தாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் ஓடிடி தளத்தில் சமந்தா அறிமுகமாகிறார்

தி ஃபேமிலி மேன் இரண்டாவது சீசனுக்காக டவிட்டர் தளம் பிரத்யேக எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த எமோஜியில் மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தாவின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களால் அதிக எதிர்பார்க்கப்படும் படமோ அல்லது வெப் தொடர்களோ வெளியாகும்போது ட்விட்டர் தளத்தில் இப்படி எமோஜி வெளியாவது வழக்கம் தான் எனினும், ட்விட்டர் எமோஜியில் ஒரு தென்னிந்திய நடிகையின் படம் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலம்பம் சுற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சீமராஜா படத்தில் சிலம்பம் சுற்றுவது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியை பார்ப்பது போல் உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் சமந்தா. விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் முக்கிய ரோலில் நடிக்கிறார் சமந்தா. இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.