விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. 

பூஜையில் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி சிரித்த முகமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்வேதா சாபு சிரில் கலை இயக்கம் செய்கிறார். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. 

இந்நிலையில் நடிகை சமந்தா படக்குழுவுடன் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேக்கப் செய்து கொண்டிருக்கும் சமந்தாவை வரவேற்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். 10 நிமிடத்தில் ஷாட் ரெடியாகாது, பொறுமையாக வாருங்கள் என்று நகைச்சுவையாக கூறுகிறார் விக்னேஷ் சிவன். ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என திரை வட்டாரங்கள் கூறி வருகிறது.  

இந்த படத்தில் நடிக்க முடியாது என்று நடிகை சமந்தா கூறியதாக முன்பு செய்திகள் இணையத்தில் கசிந்தது. படத்தின் பூஜை நாளில் வெளியான அறிவிப்பு போஸ்டரில் சமந்தாவின் பெயரை பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு சமந்தா தமிழில் நடிப்பதால் அதிக ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். 

முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் சேர்ந்து நடித்த நானும் ரௌடி தான் படம் ஹிட்டானது. அதனால் இந்த வெற்றிக் கூட்டணியில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.