திரையுலகில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். சினிமா மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

தல அஜித் சினிமா துறையில் நுழைந்து 28 வருடங்கள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். சென்ற மாதம் அதற்காக ஒரு காமன் DP வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதை முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் வெளியிட்டிருந்தனர். மேலும் பல சினிமா நட்சத்திரங்களும் தல அஜித்துக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் பற்றி பதிவு செய்துள்ளார். அதில் சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் வந்திருந்தாலும் பல கஷ்டங்களை, பல தோல்விகளை சந்தித்தாலும் ஒவ்வொரு முறையும் அதிக வலிமையுடன் மீண்டு வந்து தற்போது தமிழ் சினிமாவின் தலயாக உயர்ந்திருக்கிறார். உங்கள் ஒவ்வொரு பக்கமும் இன்ஸ்பிரேஷனாக எடுத்து கொள்ளலாம். 28 வருடங்கள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார். 

கார்த்திகேயா RX 100 என்ற தெலுங்கு படத்தின் மூலமாக உலகளவில் பிரபலமானார். தற்போது இவர் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி அடிக்கடி வருவதை காண முடிகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. 

போனி கபூர் தயாரித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது. அதன் பின் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போட பட்டதால் வலிமை படத்தின் ஷுட்டிங் தடைபட்டு இருக்கிறது. இயல்பு நிலை திரும்பிய பிறகு தான் ஷுட்டிங் துவங்க முடியும் என்கிற சூழ்நிலை உள்ளது. அதுவரை ஷுட்டிங்கிற்கு அரசு அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்கள் ஷூட்டிங்கிற்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. 

தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின்றன. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.