தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டு(2022) வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ஆல் டைம் ரெக்கார்டாக வசூல் சாதனை படைத்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ரோஹித் ஷெட்டி தளபதி விஜய் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக இயக்குனர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ரன்வீர் சிங் நடித்துள்ள காமெடி திரைப்படமான சர்க்கஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சர்க்கஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ரோஹித் ஷெட்டியிடம் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து மற்றொரு தென்னிந்திய நடிகரை வைத்து படம் இயக்க விருப்பம் இருந்தால் எந்த நடிகருடன் பணியாற்ற விரும்புவர்கள் எனக் கேட்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி விஜய் அஜித் குமார் சூர்யா கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து இயக்குனர் ரோகித் ஷெட்டியிடம், ரன்வீர் சிங் மற்றும் தளபதி விஜய் இருவரையும் இணைத்து படம் இயக்க விருப்பம் உள்ளதா என கேட்டதற்கு கண்டிப்பாக விருப்பம் இருக்கிறது.  இருவரும் நன்றாக நடனமாடுவார்கள் எனவே இருவரையும் வைத்து ஒரு படம் இயக்குவதற்கு எனக்கு விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.