தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக நுழைந்து பின்னர் தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆனவர் நடிகர் ரோபோ ஷங்கர். படங்கள் தவிர்த்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். வெப் தொடரிலும் கவனம் செலுத்துகிறார். அவரின் மகள் இந்திரஜா அட்லி இயக்கித்தில் விஜய் நடித்த பிகில் படம் மூலம் நடிகையானார். பாண்டியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்திரஜா. முதல் படத்திலேயே தன் அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

இந்நிலையில் தனுஷ் ரசிகர் ஒருவரின் உணவக திறப்பு விழாவில் ரோபோ ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவர் தனுஷ் பற்றி பெருமையாக பேசினார்.

தனுஷ் பற்றி ரோபோ ஷங்கர் கூறியதாவது : தனுஷ் எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை, வாழ்க்கையே கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் தனுஷ் தான். கொரோனா நேரத்தில் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மிகப் பெரிய உதவியை செய்திருக்கிறார்.

ஒரு பர்சனல் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் தான் தனுஷுக்கு போன் செய்து பேசினேன். அப்பொழுது அவர் டெல்லிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ஊருக்கு செல்லும் நேரத்தில் அவரிடம் உதவி கேட்கலாமா, வேண்டாமா என்று யோசித்து, தயங்கித் தயங்கி தான் கேட்டேன்.

எனக்கு குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் தனுஷ். நான் என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட ஆரம்ப புள்ளியை பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியது தனுஷ் தான் என்றார்.

கெரியரை பொறுத்த வரை தனுஷின் ஜகமே தந்திரம் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. படத்தின் டீஸரை வேற்று வெளியிட்டனர். 

சமீபத்தில் வெளியான சக்ரா படத்தில் ரோபோ ஷங்கரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதையாக அமைந்தது. 

சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார் ரோபோ ஷங்கர். கெளதம் மேனன் இயக்கிய எதிர்பாரா முத்தம் படத்தில் நடித்திருந்தார். கெளதம் மேனன் உடன் ரோபோ ஷங்கரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது.