தமிழகத்தின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் விவேக்.தனது காமெடி மூலம் பல படங்களில் ரசிகர்களை சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்தவர்.படங்களில் நடிப்பதை தவிர சமூகத்தின் மீது அக்கறை கொண்டு பல சமூகநலன்களை செய்துள்ளார் விவேக்.ஜனங்களால் சின்னக்கலைவாணர் என்று அன்பாக அழைக்கப்பட்ட இவருக்கு கலைமாமணி,பத்மஸ்ரீ விருது வழங்கி அரசு கௌரவித்திருந்தது.

பல கோடி பேரால் ரசிக்கப்பட்டு வந்த விவேக் கடந்த 2021 ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென காலமானார்.இவரது திடீர் மரணம் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவரது பல சமூக வேலைகளை ரசிகர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.இவரது முதல் வருட நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.

இதனை அடுத்து சில தினங்கள் கழித்து விவேக்கின் மனைவி அருட்செல்வி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து சமூகம் மற்றும் கலைத்துறையில் பல நல்ல காரியங்களை செய்துள்ள விவேக்கை கௌரவப்படுத்தும் வகையில் அவர்கள் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு விவேக் வசித்த தெருவின் பெயரை அவரது பெயரில் மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது.சின்னக் கலைவாணர் விவேக் சாலை அந்த தெருவின் புது பெயர்ப்பலகை தற்போது மாற்றப்பட்டு அதன் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.