தமிழகத்தின் முன்னணி ரேடியோ ஜாக்கியாக தமிழக மக்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த RJ.பாலாஜி தற்போது தமிழ் திரையுலகில் நடிகராகவும் கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த நடிகர் RJ.பாலாஜி தற்போது நகைச்சுவை மையப்படுத்திய பல படங்களில் கதாநாயகனாகவும் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக அரசியலை நகைச்சுவையோடு கலந்து கட்டி LKG திரைப்படத்தில் ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த RJ.பாலாஜி, தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்தார். நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இந்த வரிசையில் அடுத்ததாக RJ.பாலாஜி இயக்கி நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்தை RJ.பாலாஜி மற்றும் NJ.சரவணன் இணைந்து இயக்கியுள்ளனர்.

RJ.பாலாஜியுடன் இணைந்து ஊர்வசி மற்றும் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, லலிதா, அபர்ணா பாலமுரளி, விஜய் டிவி புகழ், யோகிபாபு, ஷிவானி நாராயணன், பவித்ரா லோகேஷ் மற்றும் மயில்சாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள வீட்ல விசேஷம் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வீட்ல விசேஷம் திரைப்படத்திலிருந்து வெளிவந்த டாடி பாடல் மற்றும் பாப்பா பாட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வீட்ல விசேஷம் படம் வரும் ஜூன் 17-ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், வீட்ல விசேஷம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.