இந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

கொரோனா காலத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். மேலும் காவல் துறையின் பணியை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். வெறித்தனமான வொர்க்கவுட் பிரியையான ரகுல் ப்ரீத் சிங், லாக்டவுனில் ஜிம் எதுவும் திறக்காத நிலையில், வீட்டில் இருந்தபடியே வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்தார். 

இந்நிலையில் ரகுல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலி ரியா சக்ரபர்த்தி போதை பொருள் சர்ச்சையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். Narcotics Control Bureau (NCB) விசாரணையில் அவர் பாலிவுட்டில் பல முன்னணி பிரபலங்களின் பெயர்களை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

அதனால் NCB விரைவில் ரகுல் ப்ரீத் சிங்கையும் விசாரிக்க துவங்கும் என தெரிகிறது. ரியா சக்ரபர்த்தி கொடுத்திருக்கும் 20 பக்க ஸ்டேட்மெண்ட்டில் சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் 25 A லிஸ்டர் பாலிவுட் பிரபலங்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் என பலரது பெயர்கள் அதில் உள்ளதாக கூறப்படுகிறது.

சாரா அலி கான் பெயரையும் ரியா கூறியிருக்கிறார் என்பதால் பாலிவுட்டில் பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் பிரபல நடிகர் சைப் அலி கானின் மகள். அவர் தற்போது தனுஷ் நடக்கும் அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமாரும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் சர்ச்சை தொடர்பாக ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங்கும் சர்ச்சையில் சிக்கியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் காத்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.