தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ரெஜினா கெஸன்ட்ரா கடைசியாக நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த சக்ரா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டியிருந்தார். மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக நடிகை ரெஜினா கெஸன்ட்ரா நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் கசட தபற, நடிகர் அருண் விஜய்யின் பார்டர், அரவிந்த் சுவாமியின் கள்ளபார்ட், இயக்குனர் டிகே-வின் கருங்காப்பியம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில், ரெஜினா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தயாராகிய ஹாரர் த்ரில்லர் திரைப்படமான சூர்ப்பனகை திரைப்படம் தெலுங்கில் நே னா எனும் பெயரில் வெளியாகிறது. தயாரிப்பாளர் ராஜ சேகர் வர்மாவின் ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகியிருக்கும் சூர்ப்பனகை படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகை ரெஜினா கெஸன்ட்ரா உடன் இணைந்து நடிகை அக்ஷரா கவுடா, மன்சூரலிகான், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சூர்ப்பனகை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் விரைவில் சூர்ப்பனகை படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.