கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இத்திரைப்படம் ரவி ஓ எஸ் இயக்கத்தில் கோபி, ஜான் விஜய், நிரஞ்சன், ரம்யா பாண்டியன் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் நடிப்பில்வெளிவந்த படமாகும்.

இதையடுத்து ரம்யா பாண்டியன் 2016ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. ஜோக்கர் அரசியல் மற்றும் சமூக கதை கொண்ட திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், காயத்திரி, பவா செல்லத்துரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இதன் பின் இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த படம் ஆண் தேவதை. இந்தப் படத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன். இந்த படத்தில் சமுத்திரகணி, மோனிகா மற்றும் ராதாராவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு இவரின் புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பல ரசிகர்களை கவர்ந்தார். மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கியமான நட்சத்திரம் என்றால் அது ரம்யா பாண்டியன் தான்.

இதன் பின் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்ககேற்றார் ரம்யா. இந்நிகழ்ச்சியில் சிங்கப் பெண் என்ற பட்டமும் அவருக்குக் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி பெண் போட்டியாளராக வெளியாகினார் ரம்யா. இந்த நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கவுள்ளார். தற்போது ரம்யா பாண்டியனுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.