உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களின் மூலம் திரை விரும்பிகளை ஈர்த்தவர் இயக்குனர் மகேந்திரன். சிறந்த இயக்குனரான இவர் அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் 2-ம் தேதி உடல்நலக்குறைவால் 79 வயதில் அவர் காலமானார். இன்று மகேந்திரனின் பிறந்தநாள் என்பதால் அவரை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெ.மகேந்திரன் பற்றி உருக்கமாக பேசி உள்ள ஆடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினியின் சினிமா பக்கங்களில் மகேந்திரனுக்கு என்றுமே ஒரு தனியிடம் உண்டு, அவரது நெருங்கிய நண்பரும் கூட. 

அதில் பேசியவர், முள்ளும் மலரும் படத்தில் என்னுடைய நடிப்பை பற்றி புகழ்ந்து பேசினார்கள், தற்போதும் பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு காரணம் மகேந்திரன் சார் அவர்கள் தான். அவர்களுடைய மிக மிக நெருங்கிய நண்பர், ரொம்ப வித்தியாசமான மனிதர், அவருடைய டேலண்ட் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

அவருக்கு பணம், பெயர், புகழ் அதெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என் கொஞ்சம் கூட கவலைப்பட்டதில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை. அதற்கு முக்கியத்துவம் தருவதும் இல்லை. தரமான படங்கள் கொடுக்க வேண்டும், தமிழ்ப் படங்களின் தரத்தை உலக அளவுக்கு கொண்டு போக வேண்டும், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஒரே நோக்கம். சினிமாவை அணுஅணுவாக நேசித்தவர் அவர்.

தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.