அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்தார் ரஜினிகாந்த் !
By Sakthi Priyan | Galatta | April 08, 2021 11:22 AM IST
தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அறிவித்தார். இதையடுத்து உடல் நலம் தேறிய பின்னர் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் மே 3-ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் விருது விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.