எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு முதல் மூன்று நாட்களிலேயே 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயமோகனின் வசனத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் படத்தை மெருகேற்றியுள்ளார்.

பொன்னியின் செல்வனில் மிக முக்கிய கதாபாத்திரங்களாக சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க விரும்பியது குறித்தும் பொன்னியின் செல்வன் நாவல் குறித்தும் பேசியது தற்போதும் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயம்ரவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் படத்திற்காக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஒரு நிமிட உரையாடல் இந்த நாளை, இந்த வருடத்தை மட்டுமல்ல என் ஒட்டுமொத்த திரை பயணத்திற்கும் புது அர்த்தத்தை சேர்த்துள்ளது. உங்களது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தலைவா!” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். ஜெயம்ரவியின் அந்த பதிவு இதோ…
 

That 1 minute conversation made my day, my year and added a whole new meaning to my career. Thank you Thalaiva for your kind words & childlike enthusiasm. I’m overwhelmed, humbled & blessed to know you loved the movie & my performance 🙏🏼 @rajinikanth sir

— Arunmozhi Varman (@actor_jayamravi) October 4, 2022