தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் நகைச்சுவை திரைப்படம் அயலான். இசைப்புயல் A.R.ரஹ்மான் இசை அமைத்துள்ள அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட மற்றும் VFX பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் தயாராகிவரும் #SK20 படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21 படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பாலசரவணன், RJ விஜய், காளி வெங்கட், ராஜு ஜெயமோகன், சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர். 

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் டான் படத்தின் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டான் படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…