நடிகர் மாதவன் முதல்முறை இயக்குநராக களமிறங்கியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் கடந்த ஜூலை 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணன் அவர்களின் பயோபிக் படமாக உருவாகியிருக்கும் ராக்கெட்ரி-நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணன் கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார்.

ட்ரை கலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ராக்கெட்ரி படத்திற்கு ஸ்ரீஷா ரே ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். முன்னதாக கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட ராக்கெட்ரி திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் மாதவன் மற்றும் படக்குழுவினரை எழுந்து நின்று பாராட்டினர். 

தொடர்ந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தை கண்டு ரசித்த அனைவரின் பாராட்டு மழையில் ராக்கெட்ரி படக்குழுவினர் நனைந்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்து ரசித்து மாதவன் மற்றும் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள். 

நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். 

இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்.

என தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்த பதிவு இதோ…
 

@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR

— Rajinikanth (@rajinikanth) July 4, 2022