தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நாயகர்களாகவும் இந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமைகளாகவும் விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் தங்களது திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தனர். அந்த சமயத்தில் எம்ஜிஆர் - சிவாஜி திரைப்படங்களுக்கு இருந்த அதே அளவு வரவேற்பு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அபூர்வ ராகங்கள் தொடங்கி மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அவர்கள், ஆடுபுலி ஆட்டம், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் என ரஜினி - கமல் இணைந்து நடித்த அத்தனை திரைப்படங்களும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கா இடம் பிடித்தன. இந்த வரிசையில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய திரைப்படங்களில் ஒன்று அவள் அப்படித்தான்.

குமார் ஆர்ட்ஸ் சார்பில் இயக்குனர் C.ருத்ரய்யா தயாரித்து இயக்கிய அவள் அப்படித்தான் திரைப்படத்திற்கு வண்ணநிலவன் & அனந்து ஆகியோர் கதை-வசனம் எழுதி இருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த அவள் அப்படித்தான் படத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசனுடன் இணைந்து ஸ்ரீபிரியா மற்றும் சரிதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இசையில் KJ.ஜேசுதாஸ் அவர்கள் பாடிய அவள் அப்படித்தான் படத்தின் “உறவுகள் தொடர்கதை” பாடல் என்றும் மக்கள் மனதில் ரீங்காரமிடும் வருகின்றது. 

இந்நிலையில் பானா காத்தாடி, செம போத ஆகாதே, பிளான் பண்ணி பண்ணனும் படங்களின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், அவள் அப்படித்தான் திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிளாசிக் ஹிட்டான அவள் அப்படித்தான் திரைப்படத்தின் ரீமேக் ஆக விரைவில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Feeling so elated on this auspicious day.A formal NOC from the great Rudriya's family and also got the needed blessings from the great writers #KRajeswar & #Vannanilavan
For recreating #Avalappadithan
This time universe is in resonance.The immortal classic will be recreated back pic.twitter.com/tkwZoHG67P

— Badri Venkatesh (@dirbadri) October 4, 2022