விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், பார்வையாளர்களிடையே தனது அடையாளத்தைப் பதித்தார் ரைசா. மாடலங்கில் ஆர்வம் காட்டிய ரைசாவிற்கு தனுஷின் வி.ஐ.பி-2 படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து 2018ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் குடியேறினார். 

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரைசா நடிக்கும் திரைப்படம் தி சேஸ். இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது இப்படம். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயன் பணிபுரிந்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். 

லாக்டவுனுக்கு முன்பே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு. திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் இதன் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி திரை விரும்பிகளை கவர்ந்தது. தலைகீழாக தொங்கிய படி அமைந்த ரைசாவின் போஸ்டர் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஓர் இளைஞர் ஆகியோருக்கு இடையே ஒரே இரவில் நடைபெறும் கதை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் படத்தின் பின்னணி இசை பணிகளின் இறுதி கட்டத்தில் உள்ளார் படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பைனல் மிக்ஸிங்கில் இருக்கும் அவர், ஸ்டுடியோவில் இருந்து வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் படத்தின் டீஸர் அல்லது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தி சேஸ் படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வரும் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ரைசா. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், கருணாகரன் மற்றும் கவுதம் மேனன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.