இந்திய திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையாக சிறந்த திரைப்படங்களை வழங்கிவரும் இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எழுத்தாளர் கல்கியின் புகழ்மிக்க நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பொருட்செலவில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பொண்ணியின் செல்வன் திரைப்படத்தை ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, சுந்தரசோழர், பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, மற்றும் பூங்குழலி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்களான சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான் பரபரப்பாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். முன்னதாக ஜெயம் ரவி & சீயான் விக்ரம் ஆகியோர் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில் நடிகர் ரகுமானும் தன் பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.