தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனரான ராகவா லாரன்ஸின் நடனத்திற்கு இந்திய அளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடன இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் இயக்குனராகவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

குறிப்பாக தமிழ் , தெலுங்கு மொழிகளில் இவர் இயக்கி நடித்த முனி & காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. மேலும் தமிழில் மெகா ஹிட்டான காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க லக்ஷ்மி என ரீமேக் ஆனது  குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் ருத்ரன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ருத்ரன் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ருத்ரன் படத்தின் ஃபர்ட்லுக் அல்லது டீசர் குறித்த முக்கிய அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.