ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதைத்தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான கேம்-ஓவர் திரைப்படம் டாப்ஸிக்கு பெரும் பெயரை சம்பாதித்து தந்தது. பாலிவுட் சென்ற டாப்ஸி, அங்கு நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக, அவர் தப்பட் படத்தில் நடித்திருந்தார். இது ஹிட்டாகி இருந்தது. இப்போது ராஷ்மி ராக்கெட் உள்பட சில படங்களில் நடித்து வரும் அவர், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜின் பயோபிக்கான, சபாஷ் மித்து உள்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

தற்போது தமிழில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கிவருகிறார். தீபக், இயக்குனர் ஏ.எல்.விஜய் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வைக்கவில்லை. 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் படப்பிடிப்பில் யோகிபாபு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்பட பலர் நடிக்கிறனர். ஒரே கட்டமாக இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடிக்க உள்ளனர். இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடக்கும் இதன் ஷூட்டிங்கில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் இணைந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன், டாப்ஸியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்த அவர், இப்போது அந்த படப்பிடிப்பில் எடுத்த, சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாங்கள் பணியாற்றுகிறோம் என்று கேப்ஷன் தந்துள்ளார். 

விஜய் சேதுபதி மற்றும் ராதிகா காம்போவில் வெளிவரும் அனைத்து படங்களும் ஹிட் என்பதால், இந்த படத்திற்கும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். நானும் ரவுடி தான், தர்மதுரை போன்ற படங்களில் விஜய்சேதுபதியின் அம்மாவாக நடித்திருப்பார் ராதிகா. ராதிகா கடைசியாக தனா இயக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார். சரத்குமாருடன் இவர் நடித்த பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து டாப்ஸி அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் ஜன கன மன என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை அஹ்மத் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. டி இமான் இசையமைத்து வரும் இந்த படத்தினை சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.