திரையுலகை பொறுத்தவரை சமூக பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சில படங்கள் வெளிவருகின்றன. அந்த வகையில் சாதி மற்றும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் முன்னேற துடிக்கும் இளைஞனின் பிரச்சனை எடுத்துக்கூறும் படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் அமைந்தது. 

இந்த திரைப்படம் 2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்தது. இந்த படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பரியேறும் பெருமாள் திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் திகழ்கிறது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வின் கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது.

அந்த கேள்வியில் தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும் என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கேள்வியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்டு ட்விட்டரில் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து துருவ் விக்ரம் வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இதன் அறிவிப்பு மூன்று நாட்களுக்கு முன்னர் வெளியானது.