கன்னடத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் புனீத் ராஜ்குமார்.பவர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்வது,சமூக அக்கறை கொண்ட செயல்களை செய்வது என்று பல துறைகளில் தன்னால் முடிந்த உதவியை செய்து வந்தார்.

46 வயதான இவர் அக்டோபர் 29ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் புனீத் உயிரிழந்தார்.புனீத்தின் திடீர் மறைவு கன்னட சினிமாதுறையினர் மட்டுமின்றி இந்தியா சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.எப்போதும் முகத்தில் சிரிப்போடு இருக்கும் இவர் மிகவிரைவில் பிரிந்துவிட்டார் என்று ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெங்களூரில் உள்ள கண்டீருவா விளையாட்டு மைதானத்தில் புனீத்தின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.பல லட்சம் ரசிகர்கள் நேற்று முதல் வந்து புனீத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ரசிகர்களை தாண்டி பல நட்சத்திரங்களும் புனீத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜூனியர் NTR,பிரபுதேவா,யாஷ்,பாலகிருஷ்ணா என பல மாநிலங்களில் இருக்கும் நட்சத்திரங்களும்,கன்னடாவின் முக்கிய அரசியல் தலைவர்களும் புனீத்திற்கு தங்கள் இறுதி மரியாதையை நேரில் வந்து செலுத்தி வருகின்றனர்.புனீத்தின் உடல் அவரது தாய் தந்தை நினைவிடங்களுக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.