நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட பிறகு சினிமா துறையில் உள்ள நேபோட்டிசம் மற்றும் குரூப்பிசம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அளித்த பேட்டியில் பாலிவுட்டில் ஒரு கேங் தனக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்து வருகிறது என தெரிவித்து இருந்தார். 

சில நாட்கள் முன்பு, இதுதொடர்பாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் பதிவிட்டிருந்தார். தமிழ் சினிமாவில் வாரிசு கலாச்சாரம் இருக்கிறதோ இல்லையோ குரூப்பிசம் நிச்சயம் இருக்கிறது என தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகர் ஷாந்தனுவும் தன் பங்கிற்கு பதிவு ஒன்றை செய்தார். அதில் அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள் என்று ஷாந்தனு கூறியிருந்தார். 

தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சினிமா துறையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருக்கும் குரூப்பிசம் பற்றி பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள். இது பற்றி அவர் செய்துள்ள பதிவில், பாலிவுட்டில்‌ மட்டுமல்ல குரூப்பிஸம்‌ இங்கும்‌ உள்ளது. நடிகர்களிடம்‌ உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம்‌ உள்ளது. அவர்களால் தான்‌ மிகப்‌ பழமையான தயாரிப்பாளர்களும்‌ ஒதுங்கியிருப்பதுவும்‌ அதனால் தான்‌. தான்‌ மட்டுமே வாழவேண்டும்‌ என நினைக்கும்‌ அந்த பிரபல தயாரிப்பாளர்‌ தன்‌ பலத்தால்‌ சில பல தயாரிப்பாளர்களை உடன்‌ சேர்ந்து கொண்டு பலரை வாழவிடாமல்‌ கெடுத்துக் கொண்டிருக்கிறார்‌. 

ஹீரோக்களுக்கு போன்‌ பண்ணி கெடுத்துவிடுவதும்‌, ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும்‌, படத்தைப்‌ பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம்‌ பீதியை உருவாக்குவதுமாக முன்னால்‌ விட்டு பின்னால்‌ செய்யும்‌ வேலையை வெற்றிகரமாக செய்துவருகிறார்‌. 
அதற்கு சில தயாரிப்பாளர்கள்‌ உடன்‌ பட்டு நிற்பது தான்‌ வேதனை. வெகுவிரைவில்‌ முகத்திரைகள்‌ கிழியும்‌. அதற்கு நடுவில்‌ பாலிவுட்‌ போல யாரும்‌ தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம்‌ விரைவில்‌ ஒழிக்கப்பட வேண்டும்‌ என்று சுரேஷ் காமாட்சி பதிவு செய்துள்ளார். 

மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று சமீபத்தில் சுரேஷ் காமாட்சி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.