நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் கைதி. கமர்சியல் அம்சங்கள் ஏதும் இல்லாமல் வெளிவந்து வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனை படைத்த சூப்பர்ஹிட் கைதி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியிருந்தார்.தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர்.பிரபு தயாரித்தார். 

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்னணி இசையில் உருவான கைதி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.மிரட்டல் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வளர்ந்தார். இந்நிலையில் தற்போது கைதி திரைப்படத்தின் மீது கேரள மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர்.பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில்,

அனைவருக்கும் வணக்கம்! 
எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் திரு. கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரனை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
நன்றி! 
தயாரிப்பாளர், 
ரீம் வாரியர் பிக்சர்ஸ் 

என தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கைதி படத்தின் ரீமேக் பிற மொழிகளில் தயாராகவுள்ளது. மேலும் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.